Friday, March 4, 2011

Eco Camp at Vedanthangal and Karikili



பிள்ளை பெற்றால் மட்டும் போதுமா?


டந்த வாரம் ஒரு ரயில் பயணம் செய்ய வேண்டிய நிலையில்,அவசரம் அவசரமாக டிக்கெட் எடுக்க ஓடினேன்.இன்றும் வழக்கம் போலவே கூட்டம்;நீண்ட வரிசை. எனக்கு இது போன்ற நீண்ட நேரம் வரிசையில் நிற்பது என்றால் மகா எரிச்சல்.என்ன செய்வது,வீட்டுத்தேவைக்காவது ஒரு நாள் ரேசனில் நின்றிருந்தால் இதெல்லாம் சர்வசாதாரணமாகி இருக்கும்.

ஆனால், எனக்கு பின்னால் நின்றிருந்த பெரியவர் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் நின்றிருந்தார். அவர் கவலையெல்லாம், கொஞ்சம் தள்ளி நின்றிருந்த தனது பேரன் எங்காவது போய் விடுவானோ! என்பது தான்.

வழக்கம்போலவே,விசாரிப்புகள் முடிவடையும் தருவாயில் டிக்கெட் எடுக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.நான் அவசரமாய் ஓட தயாரானேன்,பத்து நிமிட பழக்கத்திற்காக அவருக்கும்,அவரது பேரனுக்கும் இடம் போட்டு வைக்கும் கோரிக்கை பெரியவரால் முன்வைக்கப்பட்டது.

ரயில் புறப்பட்டதிலிருந்து பேரனின் கேள்விகளும் புறப்பட்டது.

"அடுத்த வாரம் என்னை வந்து வீட்டிற்கு கூப்பிட்டு போங்க... தாத்தா"

"பார்க்கலாம்,சாமி"

"சொல்லு, தாத்தா" கொஞ்ச பேரனுக்கே உரிய அதட்டல.

"நான் அடுத்த வாரம் சித்தப்பா வீட்டிற்கு போயிடுவேன்"

"அங்கே, போனால் என்ன, வர முடியாதா?"

"இல்லை,அடுத்த மாசம் பூராவும் சித்தப்பா வீட்டில் தான் சாப்பாடு,அவங்களுக்கு தான் வேலை செய்ய வேணும்."

பத்தாம் வகுப்பு படிக்கும் பேரனுக்கும், பாசத்துக்குரிய தாத்தாவுக்கும் இடையேயான ஒரு உரையாடலில் இப்போதைய சமூகத்தில் பெருகி வரும் "சமூக நோய் ' இந்த பெரியவரை தாக்கி இருப்பது அறிய முடிந்தது.


ஆமாம், அவர்களின் எதார்த்த உரையாடலில் இருந்து பெரியவருக்கு இரு மகன்கள்,இருவரும் அரசாங்க உத்தியோகம்.பெரியவரின் மனைவி இறந்த பிறகு அப்பாவை யார் கவனிப்பது என்ற போட்டியில் மாத தவணையில் ஒவ்வொரு மாதமும் ஒரு மகன் வீட்டில் தங்கியிருப்பது தான்.அந்த மாதம் முழுவதும் குறிப்பிட்ட மகன் வீட்டிற்கு பில் கட்டுவது,ரேசன் கடைக்கு செல்வது, பேரன்களுக்கு உதவுவது போன்ற பணிகளை செய்ய வேண்டுமாம்.

வயதான காலத்தில் கிழவியும், கிழவனும் ஏன் பாசமாக இருக்கிறார்கள் என்று புரியாதவர்கள் இனி அவர்களை உற்று கவனியுங்கள்.நேரில் பயங்கரமாக சண்டை போடுவார்கள், கொஞ்ச நேரங்கூட பிரிந்து இருக்க மாட்டார்கள்.

ஆனால்,பெற்ற பிள்ளைகள் ?

தென்னையை பெற்றால் இளநீரு
பிள்ளையை பெற்றால் கண்ணீரு


மின்திருட்டைத் தடுத்தால் தட்டுப்பாடு நீங்கும்!

        எழுதியவர்  எஸ். ரவீந்திரன்       

  மிழகத்தில் மின்வெட்டு அத்தியாவசியமான விஷயங்களில் ஒன்றாக மாறிவிட்டது. கோடையிலும் சரி, மழையிலும் சரி பற்றாக்குறை என்பது எழுதப்படாத விதியாகிவிட்டது. பெரும்பாலும் மின்தடை ஏற்படுவது இயற்கையின் சதிதான் எனக் கூறப்பட்டாலும் செயற்கைத் தட்டுப்பாடுதான் அவ்வப்போது ஏற்படுகிறது. காற்றின் வேகம் குறைதல், மழையின்மை, நீர்நிலைகளில் வறட்சி போன்றவற்றால் மின் உற்பத்தி பாதிக்கப்படுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

அதேவேளையில் இருக்கும் மின்சாரத்தைச் சீராகப் பயன்படுத்தினாலே போதும். மின் தட்டுப்பாட்டை முக்கால் பங்கு சரிசெய்துவிடலாம். புதிய மின்திட்டங்களை முறையாக, குறித்த காலத்துக்குள் செய்யாத காரணத்தால் இதுபோன்ற பிரச்னைகளை சந்திக்க நேரிடுகிறது.

அண்மையில் தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் பல கோடி ரூபாய் மதிப்புக்கு மின்சாரத்தைத் திருடியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையறிந்ததும் அந் நிறுவனத்தினர் அபராதத் தொகையை உடனடியாகச் செலுத்தி தப்பிவிட்டனர். இதேபோல பொள்ளாச்சி அருகேயுள்ள ஒரு தொழிற்சாலையில் ரூ.1.6 கோடி அளவுக்கு மின்திருட்டு மோசடி கண்டுபிடிக்கப்பட்டது.

 ஒன்றல்ல, இரண்டல்ல, பல நிறுவனங்கள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள் கோடிக்கணக்கில் மின் திருட்டில் ஈடுபட்டு வருகின்றன. இது பல அதிகாரிகளுக்கு அரசல்புரசலாகத் தெரியத்தான் செய்கின்றன.

 இதுபோலவே வீடுகளில் திருட்டுத்தனமாக மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. இலவச மின்சாரம் என்ற பெயரில் மோட்டார் பயன்படுத்தும் பெரிய விவசாயிகள், தண்ணீரை அதிக விலைக்கு விற்கின்றனர். கிராமப்புறங்களில் ஏழை விவசாயிகளின் வயல்களுக்கு குறிப்பிட்ட தொகையைப் பெற்றுக்கொண்டு இலவச மின்சாரம் என்ற பெயரால் லாபம் பெறுபவர்களும் உள்ளனர். இன்னும் இலவச மின்சாரத்தைப் பயன்படுத்தும் வீடுகளிலிருந்து பக்கத்து வீடுகளுக்கும், கடைகளுக்கும் திருட்டுத்தனமாக மின்சாரம் எடுக்கப்படுகிறது.

 தமிழகத்தில் அளிக்கப்படும் இலவச மின்சாரத்தால் ஏழைகள் பயன்பெறுவதாக அரசு தெரிவிக்கும் அதேநேரத்தில் இதுபோன்ற மின்திருட்டுகளைத் தடுத்தாலே மின் தட்டுப்பாட்டை அறவே அகற்றலாம்.

தினசரி 2 மணி நேரம் மட்டுமே மின்தடை என மின்வாரியம் அறிவிக்கிறது. ஆனால், அறிவிக்கப்படாமலேயே 4 அல்லது 5 மணி நேரத்துக்கு மின்தடை ஏற்படுகிறது. இதற்கு மின்வாரியம் அளிக்கும் விளக்கம், பராமரிப்பு, தொழில்சாதனங்களில் கோளாறு என்பதுதான். 

 இப்படி தடை ஏற்படுத்துவதால் மாணவர்கள், பெற்றோர், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோர் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். இதனால் அவர்களுக்கு வேலை இழப்பு, வருவாய் இழப்பும் உண்டாகிறது. 

 மேலும், கிராமப்புறங்களில் கேட்கவே வேண்டாம். எப்போது மின்சாரம் நிறுத்தப்படும், மீண்டும் எப்போது வரும் என மின்வாரிய அதிகாரிகளுக்கே தெரியாது. இதனால் கிராமங்களில் பல்வேறு பாதிப்புகள் உருவாகின்றன. இரவு நேரங்களில் குழந்தைகள், முதியோர், நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

 ஆனால், அரசோ எதுவுமே நடக்காததுபோல பேசுகிறது. காரணம் கேட்டால், பிற மாநிலங்களைவிட குறைந்த நேரம்தான் மின்தடை என பதில் கிடைக்கிறது. இப்படி எத்தனை காலத்துக்குத்தான் மின் தட்டுப்பாட்டால் மக்கள் அவதிப்பட வேண்டும் என்பது தெரியவில்லை. 

விரைவில் மின் தட்டுப்பாடு சரியாகிவிடும் என்ற அரசின் அறிவிப்பு அவ்வப்போது மக்களைச் சமாதானப்படுத்தும் முயற்சியாகவே தெரிகிறது. அது சீரமைக்கப்படுமா என்பது கேள்விக்குறிதான். இவற்றைச் சரிகட்ட அரசு மேலும் பல திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். 

சாண எரிவாயு, மூலிகை எரிபொருள், கழிவுநீரைச் சுத்திகரித்தல் மூலம் மின் உற்பத்தி, குப்பைக் கழிவுகளிலிருந்து மின்சாரம் தயாரித்தல், அனல் மின் உற்பத்தி என பல்வேறு முறைகளுக்கு உதவி, மானியம் போன்றவற்றை அளிப்பதன் வாயிலாக தட்டுப்பாட்டைப் போக்கலாம். தவிர அரசியல் விழாக்கள், திருமணம், ஆடம்பர விழாக்களுக்கு மின் கட்டுப்பாடு கொண்டுவர வேண்டும். வெறுமனே அரசு திட்டங்கள் மீது நம்பிக்கை வைக்காமல், வீடுகள், அலுவலகங்களில் தேவையற்ற முறையில் மின்சாரம் வீணாவதைத் தடுக்கலாம். செய்வார்களா பார்க்கலாம்.

KAVITHAI


மரத்திற்குள் உறங்கும் மனம்



அம்மன் கோயில்
அரச மரத்திற்கு
ஆயிரமாயிரம் கதை தெரியும்...


ஒருநாள் நள்ளிரவு
ஊரெல்லாம் உறங்கி கொன்டிருந்தது
சில
நரிகள் தவிற


வேரில் பழுத்த  பலா வீட்டிற்குள்
ஒரு
பன்றி நுழைந்ததை
பூட்டிட்டு சந்திக்கு இழுத்தன. . .


அரச மரத்தடியில்தான்
அசிங்கம் அம்பலமானது
பலாவை கொத்த நினைத்த வல்லூறுகள்
கத்தி கத்தி பறந்தன
உடல் வளைவுகளால்தீர்ப்பு மாறியது
மரம் மட்டும் சாட்சியாய் நின்றது

இன்னொரு நாள்
திருடன் பிடிபட்டான்
அவனும் அங்கேதான் கட்டப்பட்டான்
அடித்தவர்களை பார்த்து மரம்
சிரித்தது
பாவம்
அகப்பட்டுக்கொண்டவன் அடிபடுகிறான்
அடிப்பவனை யார் அடிப்பார்

அடிமேல் அடிவைத்து
மரத்தை  சுற்றினால்  திருமணம் கூடுமாம்
கூடியது  திருமணம்  மட்டுமா
நான்கு கண்களும்  தான்
மரம்  தனக்குள்
பேசிக்  கொண்டது
நான்  பார்க்காத   நாடகமா  என்று

அம்மாவை காப்பது யார் என்று
அண்ணனுக்கும் தம்பிக்கும்
வழக்கு
மரத்திற்கு கண்ணீர்  வந்தது
பத்துப் பிள்ளைக்கு
சோறு போட்ட இவளுக்கு
சோறு போட ஒரு பிள்ளை இல்லை
சாவ கொடுத்திருந்தாலாவது
ஆறுதலாய் அழுதிருப்பாள்

வெள்ளைவேட்டியும்
அரிதார சிரிப்பும்
கசங்காத நோட்டும்
கும்பிட்ட கையோடு
கருப்பு மனிதர்
இங்கேதான் காரில் இறங்கினார்
ஏழை மனங்கள்
வளைந்து நின்றதை பார்த்து
அரசமரம் காரித் துப்பியது
 கோலிக் குண்டுக்கும்
கில்லி கட்டைக்கும்
அம்மணமாய் புரளும் பிஞ்சுகளை
இலைத் தூவி அணைத்துக் கொள்ளும் மரம்
 வீட்டை எழுதிக் கொடு
கடைசி வரை  சோறு போடுகிறேன் என்ற
தம்பியை நம்பி
அனாதையாக செத்த
நொண்டிக் கிழவன் பிணத்திற்கு
பூ போட்டு
வழியனுப்பியது
இந்த ஒற்றை மரம்தான்


நெற்றியில் சுருக்கமும்
கையில் புத்தகமும்
கொண்ட ஒருவர் சொன்னார்
மரம்போல் நிற்காதீர்கள் என்று
மரத்திற்கு அவமானமாய் போய் விட்டது

நானும் மனிதனும் ஒன்றா
என்று நினைத்து
மழையை தின்ன மறுத்தது. . .

மரத்தின் சத்யாகிரஹம்
யாருக்கு தெரியும்
மௌனத்தை  மொழி பெயர்க்க
இதயங்களால் மட்டும்தான்  முடியும்
இன்று இதயங்கள்
மனிதர்களால்
சிலுவையில் அறையப்பட்டு
மரித்து போய்விட்டனவே



கதை தெரிந்த அரசமரம்
சாட்சியாக நிற்பதற்காகவாது
உயிருடன் இருக்க வேண்டும்
ஆகவே மரமே...!
மழையைதின்று
 ஜீவனோடு இரு.. என
குயிலும் காகமும்  கூட்டாக கேட்டன  . . . . . . .