Monday, April 4, 2011

ஒரு லிட்டர் தண்ணீரின் விலை 1000ரூபாய்


    நான் பிறந்த மண் கரிசல் மண், வெய்யிலும், வெம்மையுமே அந்த மண் கொடுக்கும் வரம். சிவப்பான தேரி மண்ணில் ஓங்கி நிற்கும் பனைமரங்களும், நெருப்பாய் பிரதிபலிக்கும் கள்ளிச்செடிகளும் நிழலை கூட சூடாக தரும் கருவேலமரங்களும் நிறைந்த பூமியை பார்த்து பழக்கப்பட்ட மனங்களுக்கு மழை என்பது எப்போதாவது கிடைக்கும் திருவிழா கால கொண்டாட்டம்.

 அந்த அத்தி பூத்த மழையிலும் கூட விவசாயம் நடக்கும். ஈரம் படிந்த செம்மண்ணை ஏர் முனையால் கீறி பருத்தி செடிகளை வளர்த்து அதன் முதல் பிஞ்சை வாய் இனிக்க மென்று மஞ்சள் நிற பருத்திபாலை தொண்டை குளிர துளிதுளியாய் உள்ளுக்குள் இறக்கும் சுகம் இருக்கிறதே அது புதியதாக முளைத்த இளம் மீசையை தடவி பார்ப்பதற்கு ஒப்பானது.
         
  அனல் பறக்கும் கரிசல் மண்ணில் ஈரமானபோது இத்தகைய சுகம் என்றால் வளமையான மண்ணில் ஈரத்தை எந்த வார்த்தைகளால் வர்ணிப்பது. ஆனால் இப்போது காலம் போகின்ற வேகத்தை பார்த்தால் அப்படிப்பட்ட வர்ணணைகளை எழுத்தில் மட்டும்தான் காணமுடியும் போலிருக்கிறது. 


 நெல்லும், கமுகும், சந்தனமும் நிறைந்திருந்த தமிழகம் இன்று கண்ணுக்கு எட்டிய தூரம்வரை பொட்டல் காடாய் விரிந்துகிடக்கிறது. வானத்தை நோக்கி உயர்ந்து நின்ற பச்சை மரங்கள் இருந்த சுவடுகள் கூட இல்லாமல் அழிந்துகொண்டே வருகிறது. பசு கூட்டமும், ஆடுகளும் புல்வெளியில் மேய்ந்த காலம் போய் ரசாயனத்தீவணங்களை தின்று அமிலத்தில் பால்கறக்க ஆரம்பித்து விட்டன. ராஜஸ்தான் மாநிலத்தில் தான் குடிநீருக்காக மகளிர் மைல்கணக்காக நடப்பார்களாம். ஆனால் காவிரி, தென்பெண்ணை, பாலாறு பெருக்கெடுத்து ஓடிய தமிழகத்தில் குடிக்கும் தண்ணீருக்காக பல மைல்கள் நடந்தும் தண்ணீர் கிடைக்காத தாய்மார்கள் நடுரோட்டில் வாகனங்கள் செல்ல முடியாதவாறு மறியல் செய்கிறார்கள்.
       
    கங்கை, காவிரியை இணைப்போம். கிருஷ்ணா நதிநீரைக்கொண்டு வருவோம். காவேரி தடையின்றி நடந்துவர வழிசெய்வோம் என்று காலங்காலமாக பேசி வந்த அரசியல்வாதிகள் இன்று காவிரி வருவதும், முயலுக்கு கொம்பு முளைப்பதும் ஒன்று என கருதி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் 20 லிட்டர் தருகிறோம் என்று தேர்தல் அறிக்கை விட ஆரம்பித்துவிட்டார்கள்.

 இதைப்பார்க்கும்போது எப்போதோ படித்த கவிதை வரி ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது. என் தாத்தா தண்ணீரை ஆற்றில் கண்டார். என் அப்பா கிணற்றில் பார்த்தார், நான் குழாயில் கண்டேன். என் மகன் பாட்டிலில் பார்க்கிறான், என் பேரன் பார்ப்பதற்கு என்ன இருக்கும்? இதுதான் அந்த கவிதையின் பொருள். என்றைக்குமே கவிஞர்களை தீர்க்கதரிசி என்று சொல்வார்கள். ஒருவேளை இந்த கவிஞர் சொல்வதும் தீர்க்கதரிசனமாக நடந்துவிட்டால் வருங்கால உலகம் எப்படி இருக்கும் என்று நினைத்து பார்க்கவே பயமாக இருக்கிறது. 


     ஒரு காலத்தில் கிணற்றில் உள்ள நீர் இரண்டு மாடுகளை பூட்டி ஏற்றத்தில் இரைக்கப்பட்டு பயிர் பச்சைகளுக்கு பாய்க்கப்பட்டது. வீட்டு உபயோகத்திற்கான தண்ணீர் அதிகம் செலவழிக்கப்பட்டால் குடும்பத்தில் மகாலட்சுமி வாசம் செய்யாமல் கிளம்பி போய்விடுவாள் என்று மிரட்டப்பட்டு தண்ணீர் வீணாகாமல் பாதுகாக்கப்பட்டது. துணி துவைக்கும் தண்ணீர், பாத்திரம் கழுவும் தண்ணீர் போன்றவைகளை சாக்கடையில் கலக்காமல் வீட்டிலுள்ள மரம், செடிகளுக்கு விடப்பட்டது. கூரையில் இருந்து விழுகின்ற மழை நீர் கூட சேகரிக்கப்பட்டு ஏதாவது ஒரு வகையில் பயன்படுத்தப்பட்டது

 என்று விவசாயத்திற்கான ஏற்றம், ஓரங்கட்டப்பட்டு மின்சார பம்பு செட்டு வந்ததோ அன்றே தண்ணீர் அதிகமாக வீணாக ஆரம்பித்துவிட்டது. தண்ணீர் எடுக்க கஷ்டப்பட வேண்டுமா என்ன? ஒரு பட்டனை தட்டினால் போதும் ஒரு குடம் தண்ணீருக்கு பதிலாக ஒன்பது குடம் எடுக்கலாமே. பணத்தை செலவழிப்பதில் சிக்கனம் பார்க்கலாம். நீரை செலவழிப்பதில் சிக்கனம் பார்க்கலாமா? என்ற எண்ணம் மக்களிடம் மேலோங்கி அவர்களை பொறுப்பற்றவர்களாக்கி விட்டது.
           
    தண்ணீர் மிக குறைவாக கிடைக்கும் தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களில் 10 வருடங்களுக்கு முன்பு கூட ஊருணிகளை காண முடிந்தது. இந்த ஊருணிகள்தான் அந்த மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாட்டை பெருமளவில் போக்கியது எனலாம். ஆனால் இன்று ஊருணிகள் இருந்த இடமெல்லாம் முற்றிலும் அழிந்துவிட்டன.


  நேற்று காலை வரை கம்பீரமாக எழும்பி நின்ற பலமாடி கட்டிடம் சுனாமியால் தவிடுபொடியாவது போல் இயற்கை சீற்றத்தால் இந்த ஊருணிகள் அழிந்துவிடவில்லை. மண்ஆசை கொண்டே மனிதர்களின் செயலாலேயே அவைகள் காணாமல் போய் இருக்கின்றன.

 நமது பழைய கால மன்னர்கள் ஊரைசுற்றி கோவில்கள் மட்டும் கட்டவில்லை. ஒவ்வொரு கோவிலிலும் புனித தீர்த்தம் என்ற திருக்குளங்களையும் வெட்டி வைத்தார்கள். நான் இப்போது வசிக்கின்ற அரகண்டநல்லூர் அதுல்யநாதேஸ்வரர் ஆலயத்திற்கு அருகில் பாறையின்மீது இயற்கையான பெரிய சுனைநீர் வடிந்து அழகான குளம் உண்டு. எவ்வளவு வெயில் அடித்தாலும், எத்தனை வருடம் மழை இல்லை என்றாலும் அதில் நீர் வற்றவே வற்றாது. 20 வருடங்களுக்கு முன்பு வரை கூட ஊர் முழுவதும் குடிநீர் அந்த குளம்தான் கொடுத்தது. தாமிரபரணி, சிறுவாணி ஆற்றுநீர் சுனையெல்லாம் இந்த தண்ணீர் சுனையின் முன் மண்டியிட வேண்டும். அவ்வளவு சுவைமிகுந்த நீர்நிலை இன்று எப்படியிருக்கிறது தெரியுமா?

   மக்கள் அனைவரும் இயற்கை உபாதைகளை கழிப்பது அங்குதான். ஊர் குப்பைகளின் ஒட்டு மொத்த கிடங்கு அதுதான். தாமரை பூ மிகுந்த அந்த குளத்தில் இன்று தவளைகளுக்கு கூட இடமில்லை. பன்றிகள் தான் வாசம் செய்கின்றன. அனாதைபிணங்கள் பல அடையாளம் தெரியாமல் இதில்தான் மிதக்கும். இறைவனுக்கு நன்னீராட்ட உருவாக்கப்பட்ட குளம் இன்று குப்பைமேடாகி போனதற்கு யார் காரணம்? பொறுப்பற்ற மக்களும் போக்கிரித்தனமான அரசாங்கமும் தான் என்றால் அதில் தவறு இருப்பதாக யாரும் சொல்ல முடியாது. தமிழகம் முழுவதும் இப்படி ஆயிரக்கணக்கான ஆலய குளங்கள் கேட்பாரற்று சாக்கடைகளாக கிடக்கிறது.


  நமது தமிழ்நாட்டில் சிறிதும், பெரிதுமான 52 பாசன நீர் தேக்கங்கள் உள்ளனவாம். 39000 ஏரிகள் உண்டாம். 33 ஆற்று படுகைகள் இருக்கின்றனவாம். 18,26,906 கிணறுகளும் உண்டாம். இது தவிர ஓடைகள், குட்டைகள், குளங்கள் ஏராளம். இந்த எண்ணிக்கையெல்லாம் நமது பொதுப்பணித்துறை ஆவணங்களில் உள்ள எழுத்துக்கள் தான் உண்மையில் இதில் எத்தனை உருப்படியாக உள்ளது என்று சொல்ல முடியாது.

 ஏரிகள்தான் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கான நீராதார பெட்டகங்கள் என்று விஷயம் தெரிந்தவர்கள் சொல்கிறார்கள். அப்படி சொல்வதற்கு காரணம் இல்லாமல் இல்லை. நிலத்திற்கு அடியிலுள்ள தண்ணீரின் அளவு குறைந்து போகாமல் இருப்பதற்கு காரணம் ஏரிகள் தான் எனவே நிலத்தடி நீர் குறையாமல் இருக்க ஏரிகள் மிகவும் அவசியம்.

 அப்படி அத்தியாவசியமான ஏரிகள் தமிழ்நாட்டை பொறுத்தவரை யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று பார்க்கவேண்டும். சட்டப்படி சொல்வதென்றால் கண்ணை மூடிக்கொண்டு பொதுப்பணித்துறைதான் அதற்கு பொறுப்பு என்று சொல்லிவிடலாம். ஆனால் உண்மை அது அல்ல பலம் வாய்ந்த அரசியல்வாதிகளும் ஆக்கிரமிப்பு குண்டர்களும் தான் ஏரிகளின் ரட்சகர்கள். பச்சை மீனுக்கு பூனை காவல்போல அமுதசுரபிகளான ஏரிகளை பிளாட் போட்டு விற்பவர்களும், கல்லூரிகள் கட்டுபவர்களும் காவலுக்கு இருக்கிறார்கள்.


  இவர்களின் சுரண்டலுக்கு ஓரளவு தப்பிப்பிழைத்த ஏரிகள் வேலிகாத்தான் முள்ளால் நிறைந்து கிடக்கிறது. மக்கவே மக்காத பிளாஸ்டிக் குப்பைகளை ஜீரணிக்க முடியாமல் தத்தளித்துக்கொண்டு இருக்கின்றன. பல ஏரிகள் கறைகள் பலப்படுத்தப்படாமலும், தூர் வாரப்படாமலும் அப்படியே கிடைக்கிறது. தாயின் முலையை அருத்துவிட்டு பச்சை குழந்தைக்கு கிலுகிலுப்பை காட்டுவது போல உயிர் கொடுக்கும் ஏரிகளை உருஞ்சி துப்பிவிட்டு ஒய்யாரமாக சிரித்துக்கொண்டு இருக்கிறோம். நமக்கு சவக்குழி நாமே வெட்டியதை அறியாமல்.

    நீர்நிலைகளை பாழ்படுத்துவது என்பது என்னவோ தமிழர்களின் தனிப்பட்ட சொத்து சிறப்பான பண்பாடு என்று யாரும் நினைத்து கொண்டாட்டம் அடைய வேண்டாம். பரந்து விரிந்த இந்திய தேசம் முழுவதும் இந்த பண்பாடு கொடிகட்டி பரக்கிறது. நீர்நிலைகளை கெடுப்பதில் யார் முன்னோடி என்பதைதான் தேர்வு செய்யவேண்டும்.

 உதாரணமாக இயற்கை அன்னை தனது அழகான மடியை விரித்து வைத்திருக்கும் கடவுளின் சொந்த நாடு என வர்ணிக்கப்படும் கேரள மாநிலத்தில் குட்டநாடு என்ற பகுதி நீரால் சூழப்பட்ட சொர்க்க பூமியாகும். அந்த பகுதியில் இருக்கும்போது உல்லாசபுரியான பாரிசின் வெனிஸ் நகரத்தில் இருப்பதுபோல் ஒரு தோற்றம் இருக்கும். இந்த ஊரைச்சுற்றி பம்பை, மினாசில், அச்சன்கோவில், மணிமாலா போன்ற ஆறுகள் பாய்ந்து ஓடி அழகுக்கு செழுமை சேர்க்கின்றது. வெள்ளியை உருக்கி விட்டதுபோல் நான்கு புறங்களிலும் தண்ணீர் நிலவெளிச்சத்திலும், சூர்ய ஒளியிலும் மின்னி அழகுதரும் என்று கற்பனையில் அந்த ஊருக்கு இப்போது நீங்கள் போகிறீர்கள் என்றால் நிச்சயமாக ஏமாந்துபோய் தான் திரும்புவீர்கள்.

 ஆற்றங்கரையோரம் இருக்கின்ற எந்த வீடுகளிலும் கழிவரைக்கு கிடங்கு கிடையாது நேரடியாக குழாய் மூலம் மனிதகழிவுகள் ஆற்றில் கலக்கின்றன. இது மட்டுமல்ல உல்லாச படகுகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரும் இன்னும் எத்தனையோ வகையான அசுத்த நீர் அந்த ஆறுகளில் கலந்து ஆற்றுத்தண்ணீரை பார்ப்பதற்கே கருப்பாக எண்ணை பிசுபிசுப்போடு சாக்கடை தண்ணீர்போல் இருக்கிறது. இது கடவுள் தேசத்தின் ஒரு சின்ன அடையாளம் தான்.

 உயிர்வளர்க்கும் நீர்நிலைகள் பொதுமக்களாலும் அரசாங்கத்தாலும் இப்படி ஒருவகையில் வீணாகப் போகிறதென்றால். நமது ஜீவாதார நீர்வளம் அந்நிய சக்திகளின் இறக்கமே இல்லாத கொள்ளையடிப்புகளாலும் காணாமல் போய்கொண்டு இருக்கின்றன. வடக்கே கங்கை, தெற்கே காவிரி, பவானி, சிறுவாணி என நமது ஆறுகளின் மீது பன்னாட்டு நிறுவனங்களின் கழுகு பார்வை விழுந்து ஒரு சில முதலாளிகளின் கஜானாவை நிரப்பி கொண்டிருக்கின்றன
www.gangajal.com  என்ற ஒரு இணையதளத்தை ஏற்படுத்தி இந்திய நதிகளின் புணிதத்தன்மை அயல்நாடுகளில் பிரஸ்தாபிக்கப்படுகிறது. அந்த இணையதளத்தை பார்த்தவுடன் இவர்களுக்கு பாரதத்தின் புண்ணிய தீர்ததங்களின் மீது இத்தனை பக்தியா? என்று நமக்கு தோன்றும். ஆனால் பக்திக்குள் நமது நீரை பாட்டில்களில் அடைத்து அந்நிய சந்தைகளில் விற்பனை செய்யும் பகல்வேஷம் இருப்பது நிதானமாகவே புரிகிறது.
   வடமாநிலத்தில் இருக்கின்ற கங்கை எப்படியெல்லாம் கொள்ளையடிக்கப் படுகிறதோ அதேபோல தமிழகத்தில் உள்ள பவானி ஆறும் கொள்ளையடிக்கப்பட ஆரம்பிக்கப்பட்டுள்ளது. காவிரியாற்றின் துணைநதி பவானி ஆறு என்று நமக்குத் தெரியும். கோவை மற்றும் ஈரோடு மாவட்ட மக்களின் நீராதாரம் பவானிதான்.

 இந்த ஆற்றில் உள்ள செழுமையான மணல் ஒருபுறம் கொள்ளையடிக்கப் படுகிறதென்றால், இன்னொறுபுறம் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் லிட்டர் தண்ணீர் அரசாங்க அனுமதியோடு எடுக்கப்பட்டு அயல்நாட்டு கம்பெனிக்கு விற்கப்படுகிறது. மேலும் பவானி போலவே தாமிரபரணி, வைகை போன்ற ஆறுகளும் கோகோ-கோலா நிறுவனத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. இந்த கொடுமைகளுக்கெல்லாம் சிகரம் வைத்தார்போல ஆலைகளில் உள்ள ரசாயனக்கழிவுகள் ஆறுகளில் கலக்கப்பட்டு தண்ணீரும் பூமியும் ஒரே நேரத்தில் விஷமாக்கப்படுகிறது.
             
  சில மாதங்களுக்கு முன்னால் பெருந்துறைக்கு அருகில் உள்ள ஊத்துக்குளிக்கு சென்றிருந்தேன். ஊத்துக்குளி என்றதும் தளதளவென்ற வெண்ணைய் ஞாபகத்திற்கு வரும். அங்கு கிடைக்கின்ற எருமைத்தயிரில் பழைய சாதத்தில் பிசைந்து சாப்பிட்டாலே கையெல்லாம் ஒட்டிக்கொள்ளும் வெண்ணையை கழுவததற்கு முழுமையாக ஒரு நாள் கூட பிடிக்கலாம்.


  ஆனால் அப்படிப்பட்ட ஊரில் குடிப்பதற்கு தண்ணீர் இல்லை. 5 ரூபாய் கொடுத்து ஒரு குடம் நல்ல தண்ணீர் வாங்கினால் அதை ஒரு வாரத்திற்கு வைத்து குடிக்கவேண்டும். அடுத்த குடத்திற்கு காசு கொடுத்தாலும் தண்ணீர் கிடைக்காது. ஊத்துக்குளி பரவாயில்லை. அதன் அருகில் உள்ள திருப்பூர் இருக்கிறதே அதுதான் தமிழ்நாட்டின் சஹாரா.

 ஒரு குடம் உப்புத்தண்ணீரில் துணி துவைத்து அலசி போட்டு விட்டு மீதமுள்ள தண்ணீரில் குளிக்கவும் வேண்டும். ஒரு நாளைக்கு இரு வேளை குளிக்கும் நபர்களை எதாவது தப்புசெய்தால் தண்டனை அனுபவிக்க இந்த ஊரில் கொண்டுவந்து விட்டுவிட்டால் மூன்றே நாளில்  பைத்தியமாகி  விடுவார்கள் அல்லது செத்துவிடுவார்கள். ஆனால் அந்த நகரத்தின் தண்ணீர் தேவைகளை பற்றி அரசாங்கமோ அங்குள்ள உள்ளூர் மக்களோ கவலைப்படுவதாக தெரியவில்லை. குதிரைத்தலையில் புல்லைக்கட்டி ஓடவைப்பதை போல அவர்களின் கண்களில் பணத்தை மட்டுமே காட்டி கடவுள் ஓடவைத்து கொண்டிருக்கிறான் என்றுதான் சொல்ல வேண்டும்.

  திருப்பூரில் உள்ள நிலம் விவசாயத்திற்கு பயன்படாது. குழந்தைகளுக்கு சளிக்கு மருந்து கொடுக்க ஒரு துளசி வேண்டுமென்றாலும் கூட அந்த மண்ணில் வளர்க்கமுடியாது. அங்குள்ள நிலத்தடிநீரை கால்நடைகள் குடித்தால் கூட வயிறு வீங்கி செத்துபோய்விடும். அந்த அளவுக்கு அந்த ஊர் மாசு அடைந்து போனதற்கு சாயப்பட்டறைகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் சரியான முறையில் சுத்திகரிக்கப்படவில்லை என்பதுதான் காரணம்.


  மிகவும் ஆழமான ஆழ்துளை கிணறு போட்டு அதற்குள் கூட சாயப்பட்டறை கழிவுகளை விட்டு விடுவார்களாம். இந்த செயலை மனித மனதின் கொடூரத்தன்மை என்பதா? அல்லது வடிகட்டிய முட்டாள்தனம் என்பதா? எது எப்படி இருந்தாலும் மனிதர்கள் தங்களது சுயநலத்தால் இயற்கையை கொலை செய்து தங்களையும் சாகடித்துக்கொள்ள தயாராகிவிட்டார்கள்.

  ஆழ்குழாயின் மூலம் நீர் எடுக்கும் முறையை நமது தமிழகத்திற்கு கொண்டு வந்த காலத்தில் சராசரியாக 50 அடியிலிருந்து 100 அடிக்குள் தண்ணீர் கிடைத்துவிடும். நல்ல நீர் பிடிப்பான பகுதியில் 10 அடி ஆழத்தில் கூட தண்ணீர் கிடைக்கும். ஆனால் இன்றைய நிலைமை அபாயகரமாக உள்ளது. தமிழகத்தின் தெற்குப்பகுதியில் 800 அடிக்குமேல் துளை போட்டால்தான் தண்ணீர் எட்டிப்பார்க்கிறது. மற்ற பகுதிகளில் குறைந்தது 200 அடிகளாவது துளை போட வேண்டிய நிலை உள்ளது. நமது நிலத்தடி நீர் எல்லாம் என்னவானது? எங்கே போனது? என்று யாரும் குழம்ப வேண்டாம்.

ஆசியாவிலேயே மிகப்பெரிய நாடுகளான இந்தியாவும், சீனாவும் தங்களது நிலத்தடி நீரை முற்றிலுமாக பயன்படுத்திவிட்டதாம். இப்போது கிடைப்பதெல்லாம் மண்ணின் ஈரப்பதத்திற்காக ஒட்டிக்கொண்டிருக்கும் கடைசி சொட்டு தண்ணீர்தானாம். நிலைமை இப்படியே போனால் இந்தியாவில் இன்னும் 30 வருடத்தில் ஒரு லிட்டர் தண்ணீரின் விலை ரூபாய் 1000 த்தையும் தாண்டுமாம். 50 வருடத்தில் குடிக்க ஒரு வாய் தண்ணீர் இல்லாமல் தாகத்திற்கு மாத்திரை போட்டுக்கொண்டு இந்தியர்கள் அனைவரும் சிறுநீர் பை வீங்கி சாகவேண்டியதுதான்.


  நிலைமை இப்படி இருக்க சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை 20 லிட்டர் இலவசமாக தரப்போவதாக ஜெயலலிதா அறிவித்துள்ளது நிலைமை உணர்ந்த பொறுப்பான செயல் என்று யாராலும் சொல்ல முடியாது. இந்த திட்டத்தை கலைஞர் கருணாநிதி அறிவித்திருந்தால் ஏதோ ஒரு மினரல் வாட்டர் நிறுவனத்திடம் கமிஷன் வாங்கிவிட்டதாக எல்லோரும் சொல்வார்கள். நான் கூட ஆம் அப்படித்தான் இருக்கும் என்று எழுதுவேன்.

ஆனால் இதை ஜெயலலிதா அறிவித்திருப்பதை யாரும் கண்டு கொண்டதாக தெரியவில்லை. அந்நிய சக்திகளுக்கு தண்ணீரை தாரை வார்க்கக்கூடாது என்று போராடிய இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட வாய்திறக்கவில்லை. ஜெயலலிதா மட்டும் தண்ணீரை விற்று கமிஷனை வாங்கமாட்டாரா என்ன? ஆனால் இந்த இலவச அறிவிப்பு தமிழகத்தின் நீர்நிலையை இன்னும் மோசமாக்கும் என்பதை எச்சரிக்க வேண்டும் என்பது நமது கடமை. மழைநீர் சேகரிப்பு திட்டம் என்ற உருப்படியான திட்டத்தை கொண்டுவந்த செல்வி. ஜெயலலிதா இலவச தண்ணீர் வாக்குறுதி கொடுத்திருப்பது வேதனையானது. 


   உண்மையில் நாட்டுமக்கள் அனைவருக்கும் சுத்தமான குடிநீர் கிடைக்கவேண்டுமென்று விரும்பினால் இப்போது இருக்கும் நீர்நிலைகளை கெட்டுப்போகாமல் செப்பனிட்டாலே போதுமானது. வறட்சி வரும்போது அதைப்பற்றி கவலைப்படுவதும், வெள்ள சேதம் ஏற்படும்போது மட்டும் அதற்காக வருத்தப்படுவதும் ஆகிய மூடத்தனத்தை விட்டு விட்டு ஏரிக்குளங்களை ஆக்கிரமிப்பில் இருந்து காப்பாற்றுதல், ஆழப்படுத்துதல், மழைக்காலங்களில் வீணாக கடலில் கலக்கும் நீரை நல்ல முறையில் சேமித்து வைத்தல், ஒரு குறிப்பிட்ட ஆழத்திற்கு மேல் ஆழ்துளை கிணறுகள் தோண்டப்படுவதை தடுத்தல், ரசாயனக்கழிவை பாதுகாப்பான முறையில் சுத்திகரித்தல் போன்றவற்றை செய்தாலே தமிழகத்தின் நீராதாரத்தை அபாய விளிம்பில் இருந்து காப்பாற்றிவிடலாம்.

அதை விட்டுவிட்டு ஓட்டுக்காக சுற்றுப்புற நலனை குழி தோண்டி புதைத்தால் மக்கள் மட்டுமல்ல, அரசாங்கமும் இல்லாத பொருளாகிவிடும். நாம் வாழுகின்ற பூமிப்பந்தை சுற்றி 80% நீர்தான் பரந்துள்ளது. அந்த நீரில் 97% உப்பு நீராக உள்ளது. 2% பனிக்கட்டியாக இருக்கிறது. 1% சதவீத நீர்தான் ஆற்றிலும் குளத்திலும், கிணற்றிலும் குடிநீராக இருக்கிறது. இதை வீணடித்தால் உணவு உற்பத்தியில்லை. உயிர்வாழ வழியுமில்லை. 


   புதிய புதிய ஆடைகளை உற்பத்தி செய்வதுபோல் விவசாயம் செய்து பாதாம் கொட்டைகளை பெருக்குவதுபோல் நீரை உற்பத்தி செய்யவும் முடியாது. பூமியில் உள்ள நீரைவிட அதிகப்படியாக ஒரே ஒரு துளி நீரைக்கூட பெருக்கவும் முடியாது. இருப்பதை வைத்து பொறுப்புடன் வாழ்ந்தால் நமக்கும் நல்லது. நம் தலைமுறைக்கும் நல்லது. இல்லையென்றால் சாகும்போது கூட தொண்டையை நனைக்க ஒருதுளி நீர் இருக்காது.