Sunday, July 31, 2011

ஜிக்காட்டம்

ஜிக்காட்டம் தமிழர் ஆட்டக்கலைகளுள் ஒன்றாகும். இந்த ஆட்டத்திற்கான பெயர் முன்பு ஜிக்குஅடி என்று அழைக்கப்பட்டது. ஐம்பது, அறுபது ஆண்டுகளுக்கு முன்னால் இசைக்கருவியை வாசித்தல் என்ற தன்மை மட்டும்தான் இருந்தது அதற்குப் பிற்காலத்தில் இசைக்கேற்ப ஆட்ட முறையையும் சேர்த்துக் கொண்டு ஆடியதால் ஜிக்காட்டம் என்று பெயர்பெற்றது. இசையின் ஒலி நயத்தைக் கொண்டு (ஜக்கு, ஜிக்கு) ஜிக்காட்டம் என்று பெயர் பெற்றது. ஐந்து வகையான ஆட்டமுறைகள் இவர்களிடம் உள்ளது. தப்பாட்டம் (தப்பை கையில் வைத்துக்கொண்டு ஆடுதல்), தெம்மாங்கு (கையில் துணியை வைத்துக்கொண்டு ஆடுவது), ஒயிலாட்டம் (கையில் கோல் வைத்துக்கொண்டு ஆடுவது), டிஸ்கோ முறையில் ஆடுவது. இந்த ஆட்டத்தை எட்டுப் பேர் மட்டுமே ஆடுகின்றனர். பதினோறு பேர் இசைக்கருவிகள் வாசிப்பவர்களாக உள்ளனர். பல்வேறுவகையான ஆட்ட அடவுமுறைகள் உண்டு. விசில் ஒலிக்கேற்ப அடவுமுறைகள் மாறும். நகரி, உருட்டு குண்டா, ஜால்ரா, தப்பு, கோல், விசில் ஆகியன இசைகருவிகளாகப் பயன்படுகின்றன. கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் இக்கலைஞர்கள் அதிகம் உள்ளனர். இந்த ஆட்டகலையானது நாட்டார் கோயில் சார்ந்த சடங்கியல் நிகழ்வுகளோடு நெருங்கிய தொடர்புடையது. தொழில் இல்லாத நாட்களில் இக்கலைஞர்கள் விவசாயப் பணிகளுக்குச் செல்கின்றனர்.

புலி ஆட்டம்

புலி வேடமிட்டு ஆடப்படும் ஆட்டம் புலி ஆட்டம் ஆகும். வரிப் புலி போல் மஞ்சள், கறுப்பு, இளஞ்சிகப்பு வண்ண பூச்சுக்களால் உடலைப் பூசுவர். புலிமுகமுடைய முகம்மூடி, புலிக்காது, புலிவால், புலி நகங்கள் ஆகியவை அணிவர். காலில் சலங்கையும் கட்டுவர்.
இந்த ஆட்டம் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் கர்நாடகம், ஆந்திரப்பிரதேசம், கேரளா போன்ற பிற மாநிலங்களிலும் ஆடப்படுகிறது.
புலி ஆட்டத்தை ஒத்து கரடி ஆட்டம், மாடு ஆட்டம், கிளி ஆட்டம் போன்ற பிற ஆட்டங்களும் உண்டு.

தேவராட்டம்

தென்னிந்தியாவில் வழங்கும் ஒரு நாட்டார் ஆடல் வடிவம் தேவராட்டம். குறிப்பாக தமிழ்நாட்டில் கம்பளத்து நாயக்கர் சமூகத்தினரில் இந்த ஆட்டம் முக்கியத்துவம் பெற்ற சடங்கு.[1] எனலாம். இந்த ஆட்டத்தை தலைப்பில் தலைப்பா கட்டி, இடுப்பில் துண்டு கட்டி ஆடுவர். உருமி மேளம், பறை மேளம் ஆகியவை தேவராட்டத்தின் போது பயன்படுத்தும் இசைக் கருவிகளாக இருக்கின்றன. கம்பளத்து நாயக்கர் எனும் சமூகத்தினரின் கோவில் விழாக்களிலும், வீட்டு விழாக்களிலும் இந்த நடனம் இல்லாமல் இருப்பதில்லை. இதை ஒரு சடங்காகவே வைத்திருக்கின்றனர்.
கம்பளத்து நாயக்கர்களின் ஒரு பிரிவினரான சில்லவார்கள் என்பவர்கள் இவ்வாட்டத்தை ஆடுகிறார்கள். ஜக்கம்மா கோயிலில் சித்திரை மாதம் நிகழும் கொடை விழாவின்போதும் அவர்களின் வாழ்க்கை வட்டச் சடங்குகளான திருமணம், பூப்புச் சடங்கு ஆகியவைகளிலும் முக்கிய நிகழ்வாக தேவராட்டம் நிகழ்கிறது. பெரும்பாலும் ஆண்கள் மட்டுமே இவ்வாட்டத்தில் பங்குபெறுகின்றனர். இதன் அடவுகள் உறுமி இசைக்கேற்ப ஆடப்படுகிறது. தேவராட்டத்தில் மொத்தம் 34 வகையான அடவு முறைகள் உண்டு. ஆட்டம் மெதுவாகத்துவங்கி வேக கதியில் முடியும்.

தமிழர் ஆடற்கலை வடிவங்கள் - சிலம்பம்




சிலம்பம் ஒரு தடியடி தமிழர் தற்காப்புக் கலை ஆகும். இது தடியைக் கையாளும் முறை, கால் அசைவுகள், உடல் அசைவுகள் மூலம் தம்மை பாதுகாத்து கொள்ளுதல் என பல கூறுகளைக் கொண்ட விரிவான தற்பாப்புக் கலை. முற்காலத்தில் இக்கலையை மறவர்கள் பயன்படுத்தினர். சிலம்பம் பற்றி தமிழ் இலக்கியத்தில், குறிப்பாக சிலப்பதிகாரத்தில் குறிப்புகள் உள்ளன.

ஆதிகாலத்தில் மனிதர்கள் சண்டை செய்ய பலவிதமான ஆயுதங்களைப் பயன்படுத்தினர். (ஈட்டி, கத்தி, வாள்...). அவற்றுள் மிகவும் பழமை வாய்ந்த ஆயுதம் சிலம்பு (நிலத்தில் இருந்து ஒரு ஆளின் நெற்றி புருவம் வரையான உயரமுடைய தடி).
சிலம்பத்தில் பல வகைகள் உண்டு. அவையாவன
துடுக்காண்டம்
குறவஞ்சி
மறக்காணம்

பெரியமேளம்

பெரியமேளம் என்ற தோலிசைக் கருவியை இசைத்து ஆடுவதால் பெரிய மேளம் என்று அழைக்கப்படுகிறது. பெரிய மேளம் என்ற இசைக்கருவியோடு தமரு, சட்டி, தமுக்கு, ஜால்ரா ஆகிய கருவிகளும் இசைக்கப்படும். குறைந்தது ஏழுபேர் இக்கலையை நிகழ்த்துவர். இதை மேளசெட்டு என்பார்கள். பெரியமேளம் பத்து கிலோ எடைகொண்டதாக இருக்கும். ஒவ்வோர் அடி முறையையும் பாகம் என்கிறார்கள். மொத்தம் பத்துவிதமான பாகம் உண்டு. முதல் பாகத்தில் எல்லாவிதமான பாகங்களையும் முன்னோட்டமாக நிகழ்த்திக் காட்டுவார்கள். இரண்டாவது பாகம் என்பது எல்லா பொது விழாக்களின்போதும் மூன்றாவது பாகம் திருமண விழாக்களின்போதும் நான்காவது பாகம் கங்கையம்மனுக்குக் கூழ் ஊற்றும்போதும் ஐந்தாவது பாகம் வேகமான திரைப்படப் பாடலுக்கும் ஆறாம் பாகம் மாரியம்மனுக்குக் கூழ்வார்க்கும்போதும் பொங்கலின்போது ஏழாம் பாகமும் புலியாட்டத்திற்கு எட்டாம் பாகமும் ஒன்பதாம் பாகமும் வாசிக்கப்படுகிறது. தமிழகத்தின் வடமாவட்டங்களில் இக்கலை பரவலாக நிகழ்த்தப்படுகிறது.

பாவை கூத்து

உயிரற்ற பாவைகளை உயிருள்ள பாத்திரங்களைப் போல் இயக்கி நிகழ்த்தப்படும் கூத்து பாவைக்கூத்து என்றழைக்கப்படுகிறது. பதப்படுத்தப்பட்ட ஆட்டுத் தோலில் வரையப்பட்ட வண்ணப்படங்களை விளக்கின் ஒளி மூலம் திரைச்சீலையில் அதன் நிழல் தெரியுமாறு ஆட்டி நிகழ்த்துவது தோல்பாவை கூத்து. மராட்டியைத் தாய்மொழியாகக் கொண்ட ‘கணிகர்’ சாதியின் உட்பிரிவான ‘மண்டிகர்’ சாதியைச் சார்ந்தவர்கள் இக்கலையை நிகழ்த்துகின்றனர். ஓலை அல்லது துணியால் வேயப்பட்ட சிறிய அறையே தோல்பாவைக் கூத்தின் அரங்கமாகும். இவ்வறையின் முன்பகுதியில் மெல்லிய வெள்ளைத் திரைச்சீலை கட்டப்பட்டிருக்கும். பாவைகளை இயக்கிக் கூத்தினை நடத்துபவர் இவ்வறையினுள் இருப்பார். அரங்கின் உள்பகுதியில் உள்ள வெண்திரையை ஒட்டி ஆட்டப்படும் பாவைகளின் மீது விளக்கின் ஒளி ஊடுருவும் போது பார்வையாளர்களுக்குப் பாவைகள் தெளிவாகத் தெரியும். பார்வையாளர்கள் மண் தரையில் அமர்ந்திருப்பர். கூத்தரங்கின் முன்பகுதியில் இசைக்கருவிகளை இசைப்பவர்களும் பின்பாட்டுப் பாடுபவர்களும் அமர்ந்திருப்பர். இக்கலைஞர்கள் தங்களின் இருப்பிடத்தில் இருந்து கிளம்பி பல ஊர்களில் நிகழ்ச்சி நடத்தி மீண்டும் 6 மாதங்கள் கழித்து சொந்த கிராமத்திற்குத் திரும்புகின்றனர். ஆகவே இவர்கள் நாடோடிக் கலைஞர்களாகக் கருதப்படுகின்றனர்.

தமிழர் ஆடற்கலைகள் - தெருக்கூத்து

தெருவில் நடத்தப்படும் கூத்து தெருக்கூத்து ஆகும். கதை சொல்லல், நாடகம், ஆடல், பாடல் என பலதரப்பட்ட அம்சங்கள் தெருக்கூத்தில் கலந்திருக்கும். பொதுவாக ஒரு தொன்மம், நாட்டார் கதை, சீர்திருத்தக் கதை, அல்லது விழிப்புணர்வுக் கதை ஒன்றை மையமாக வைத்து தெருக்கூத்து நிகழும். கதைக்கேற்ற மாதிரி ஒப்பனை, கட்டையணி, உடைகள் அணிந்து நடிப்பர். பார்வையாளர்கள் கலைஞர்களுக்கு நன்கொடை வழங்குவர். தற்காலத்தில் இக்கலை அருகி வருகிறது.

சிற்றூர்ப் புறங்களில் உள்ள கோவில்களில் மேடையின்றி திரைச்சீலை போன்ற நாகரிகச் சாயல்களன்றி மூன்று பக்கமும் மக்கள் சூழ்ந்த ஆடுபரப்பில், ஆடவர் மட்டுமே உடலெங்கும் மரக்கட்டைகளாலாகிய அணிகலன்களைப் பூண்டு, கட்டியங்காரனால் அறிமுகப்படுத்தப்பட்டு நடனம், பாடல் வசனம் ஆகியவற்றால் கதைப் பொருளைக் கூத்துருவமாக்கி, இரவு பத்து மணிக்குத் தொடங்கி மறுநாள் காலை முடியும் வண்ணம் இக்கூத்து நிகழ்த்தப்படும்.

தெருக்கூத்தானது வெறும் பொழுது போக்காக அன்றி கோவில் விழாவின் ஒரு பகுதியாகவும், பக்தியை பரப்பும் கருவியாகவும் அமைகின்றது. கூத்தர்கள் விரதமிருந்து ஆடுவதும் கடவுள் கோலத்தில் வருகின்ற கூத்தர்களை கடவுளராக எண்ணி பார்வையாளர்கள் வணங்குவதும், இக்கலை ஒரு புனிதமான கலை என்பதை உணர்த்தும். அக்காலத்தில் தமிழ்நாடு முழுவதும் நிகழ்த்தப்பட்டு வந்த தெருக்கூத்து பல்வேறு வரலாற்று நிகழ்வுகளின் காரணமாக தற்காலத்தில் தமிழ்நாட்டின் வட மாவட்டங்களிலும் சேலம், தர்மபுரி மாவட்டங்களிலும் புதுசேரிப் பகுதிகளிலும் வேறு சில இடங்களிலும் மட்டுமே நிகழ்ந்து வருகின்றது.