Friday, March 4, 2011


மின்திருட்டைத் தடுத்தால் தட்டுப்பாடு நீங்கும்!

        எழுதியவர்  எஸ். ரவீந்திரன்       

  மிழகத்தில் மின்வெட்டு அத்தியாவசியமான விஷயங்களில் ஒன்றாக மாறிவிட்டது. கோடையிலும் சரி, மழையிலும் சரி பற்றாக்குறை என்பது எழுதப்படாத விதியாகிவிட்டது. பெரும்பாலும் மின்தடை ஏற்படுவது இயற்கையின் சதிதான் எனக் கூறப்பட்டாலும் செயற்கைத் தட்டுப்பாடுதான் அவ்வப்போது ஏற்படுகிறது. காற்றின் வேகம் குறைதல், மழையின்மை, நீர்நிலைகளில் வறட்சி போன்றவற்றால் மின் உற்பத்தி பாதிக்கப்படுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

அதேவேளையில் இருக்கும் மின்சாரத்தைச் சீராகப் பயன்படுத்தினாலே போதும். மின் தட்டுப்பாட்டை முக்கால் பங்கு சரிசெய்துவிடலாம். புதிய மின்திட்டங்களை முறையாக, குறித்த காலத்துக்குள் செய்யாத காரணத்தால் இதுபோன்ற பிரச்னைகளை சந்திக்க நேரிடுகிறது.

அண்மையில் தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் பல கோடி ரூபாய் மதிப்புக்கு மின்சாரத்தைத் திருடியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையறிந்ததும் அந் நிறுவனத்தினர் அபராதத் தொகையை உடனடியாகச் செலுத்தி தப்பிவிட்டனர். இதேபோல பொள்ளாச்சி அருகேயுள்ள ஒரு தொழிற்சாலையில் ரூ.1.6 கோடி அளவுக்கு மின்திருட்டு மோசடி கண்டுபிடிக்கப்பட்டது.

 ஒன்றல்ல, இரண்டல்ல, பல நிறுவனங்கள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள் கோடிக்கணக்கில் மின் திருட்டில் ஈடுபட்டு வருகின்றன. இது பல அதிகாரிகளுக்கு அரசல்புரசலாகத் தெரியத்தான் செய்கின்றன.

 இதுபோலவே வீடுகளில் திருட்டுத்தனமாக மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. இலவச மின்சாரம் என்ற பெயரில் மோட்டார் பயன்படுத்தும் பெரிய விவசாயிகள், தண்ணீரை அதிக விலைக்கு விற்கின்றனர். கிராமப்புறங்களில் ஏழை விவசாயிகளின் வயல்களுக்கு குறிப்பிட்ட தொகையைப் பெற்றுக்கொண்டு இலவச மின்சாரம் என்ற பெயரால் லாபம் பெறுபவர்களும் உள்ளனர். இன்னும் இலவச மின்சாரத்தைப் பயன்படுத்தும் வீடுகளிலிருந்து பக்கத்து வீடுகளுக்கும், கடைகளுக்கும் திருட்டுத்தனமாக மின்சாரம் எடுக்கப்படுகிறது.

 தமிழகத்தில் அளிக்கப்படும் இலவச மின்சாரத்தால் ஏழைகள் பயன்பெறுவதாக அரசு தெரிவிக்கும் அதேநேரத்தில் இதுபோன்ற மின்திருட்டுகளைத் தடுத்தாலே மின் தட்டுப்பாட்டை அறவே அகற்றலாம்.

தினசரி 2 மணி நேரம் மட்டுமே மின்தடை என மின்வாரியம் அறிவிக்கிறது. ஆனால், அறிவிக்கப்படாமலேயே 4 அல்லது 5 மணி நேரத்துக்கு மின்தடை ஏற்படுகிறது. இதற்கு மின்வாரியம் அளிக்கும் விளக்கம், பராமரிப்பு, தொழில்சாதனங்களில் கோளாறு என்பதுதான். 

 இப்படி தடை ஏற்படுத்துவதால் மாணவர்கள், பெற்றோர், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோர் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். இதனால் அவர்களுக்கு வேலை இழப்பு, வருவாய் இழப்பும் உண்டாகிறது. 

 மேலும், கிராமப்புறங்களில் கேட்கவே வேண்டாம். எப்போது மின்சாரம் நிறுத்தப்படும், மீண்டும் எப்போது வரும் என மின்வாரிய அதிகாரிகளுக்கே தெரியாது. இதனால் கிராமங்களில் பல்வேறு பாதிப்புகள் உருவாகின்றன. இரவு நேரங்களில் குழந்தைகள், முதியோர், நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

 ஆனால், அரசோ எதுவுமே நடக்காததுபோல பேசுகிறது. காரணம் கேட்டால், பிற மாநிலங்களைவிட குறைந்த நேரம்தான் மின்தடை என பதில் கிடைக்கிறது. இப்படி எத்தனை காலத்துக்குத்தான் மின் தட்டுப்பாட்டால் மக்கள் அவதிப்பட வேண்டும் என்பது தெரியவில்லை. 

விரைவில் மின் தட்டுப்பாடு சரியாகிவிடும் என்ற அரசின் அறிவிப்பு அவ்வப்போது மக்களைச் சமாதானப்படுத்தும் முயற்சியாகவே தெரிகிறது. அது சீரமைக்கப்படுமா என்பது கேள்விக்குறிதான். இவற்றைச் சரிகட்ட அரசு மேலும் பல திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். 

சாண எரிவாயு, மூலிகை எரிபொருள், கழிவுநீரைச் சுத்திகரித்தல் மூலம் மின் உற்பத்தி, குப்பைக் கழிவுகளிலிருந்து மின்சாரம் தயாரித்தல், அனல் மின் உற்பத்தி என பல்வேறு முறைகளுக்கு உதவி, மானியம் போன்றவற்றை அளிப்பதன் வாயிலாக தட்டுப்பாட்டைப் போக்கலாம். தவிர அரசியல் விழாக்கள், திருமணம், ஆடம்பர விழாக்களுக்கு மின் கட்டுப்பாடு கொண்டுவர வேண்டும். வெறுமனே அரசு திட்டங்கள் மீது நம்பிக்கை வைக்காமல், வீடுகள், அலுவலகங்களில் தேவையற்ற முறையில் மின்சாரம் வீணாவதைத் தடுக்கலாம். செய்வார்களா பார்க்கலாம்.

No comments:

Post a Comment