Sunday, July 31, 2011

தமிழர் ஆடற்கலைகள் - தெருக்கூத்து

தெருவில் நடத்தப்படும் கூத்து தெருக்கூத்து ஆகும். கதை சொல்லல், நாடகம், ஆடல், பாடல் என பலதரப்பட்ட அம்சங்கள் தெருக்கூத்தில் கலந்திருக்கும். பொதுவாக ஒரு தொன்மம், நாட்டார் கதை, சீர்திருத்தக் கதை, அல்லது விழிப்புணர்வுக் கதை ஒன்றை மையமாக வைத்து தெருக்கூத்து நிகழும். கதைக்கேற்ற மாதிரி ஒப்பனை, கட்டையணி, உடைகள் அணிந்து நடிப்பர். பார்வையாளர்கள் கலைஞர்களுக்கு நன்கொடை வழங்குவர். தற்காலத்தில் இக்கலை அருகி வருகிறது.

சிற்றூர்ப் புறங்களில் உள்ள கோவில்களில் மேடையின்றி திரைச்சீலை போன்ற நாகரிகச் சாயல்களன்றி மூன்று பக்கமும் மக்கள் சூழ்ந்த ஆடுபரப்பில், ஆடவர் மட்டுமே உடலெங்கும் மரக்கட்டைகளாலாகிய அணிகலன்களைப் பூண்டு, கட்டியங்காரனால் அறிமுகப்படுத்தப்பட்டு நடனம், பாடல் வசனம் ஆகியவற்றால் கதைப் பொருளைக் கூத்துருவமாக்கி, இரவு பத்து மணிக்குத் தொடங்கி மறுநாள் காலை முடியும் வண்ணம் இக்கூத்து நிகழ்த்தப்படும்.

தெருக்கூத்தானது வெறும் பொழுது போக்காக அன்றி கோவில் விழாவின் ஒரு பகுதியாகவும், பக்தியை பரப்பும் கருவியாகவும் அமைகின்றது. கூத்தர்கள் விரதமிருந்து ஆடுவதும் கடவுள் கோலத்தில் வருகின்ற கூத்தர்களை கடவுளராக எண்ணி பார்வையாளர்கள் வணங்குவதும், இக்கலை ஒரு புனிதமான கலை என்பதை உணர்த்தும். அக்காலத்தில் தமிழ்நாடு முழுவதும் நிகழ்த்தப்பட்டு வந்த தெருக்கூத்து பல்வேறு வரலாற்று நிகழ்வுகளின் காரணமாக தற்காலத்தில் தமிழ்நாட்டின் வட மாவட்டங்களிலும் சேலம், தர்மபுரி மாவட்டங்களிலும் புதுசேரிப் பகுதிகளிலும் வேறு சில இடங்களிலும் மட்டுமே நிகழ்ந்து வருகின்றது.

No comments:

Post a Comment